Tuesday 23 August 2016

சின்னி கிருஷ்ண கானம் 08.08.2012



  1. வெண்ணெய் உனக்கு எடுத்து வைத்தோம் வா வா கிருஷ்ணா
    கண்ணை உருட்டி நீயும் அதை உண்பாய் கிருஷ்ணா
    மண்ணை தின்று உலகை காட்டும் பால கிருஷ்ணா
    என்னையும் ஆட்கொள்வாயே கிருஷ்ணா கிருஷ்ணா

    கோகுலத்தில்  யாதவர்கள் நனைந்திட கிருஷ்ணா
    கோவர்த்தன மலைதாங்கி  காத்தாய் கிருஷ்ணா
    கோகுலத்தில் பசுக்கள் கூட ஆடின கிருஷ்ணா
    கோமகனாம் உன் புகழை பாடின கிருஷ்ணா

    திருடுவதுன் தொழில் தானே கிருஷ்ணா கிருஷ்ணா
    தயிரை அன்று   திருடித் தின்றாய்  கிருஷ்ணா  கிருஷ்ணா
    தளிர் பெண்களின்   மாற்றுடையை திருடிய கிருஷ்ணா
    எனதுள்ளத்தையும் திருடிவிட்டாய் கிருஷ்ணா கிருஷ்ணா

    மதுராவில் மலர்ந்திட்ட  மண்ணுன்னி கிருஷ்ணா
    உடுப்பியில் மத்தோடு நின்றாய் கிருஷ்ணா
    மல்லூரில் தவழ்ந்திடும் நவநீத கிருஷ்ணா
    எங்கள் உள்ளத்திலும் குடிகொள்வாய் கிருஷ்ணா

    மண்ணை அள்ளித் தின்றாயே பால கிருஷ்ணா
    பெண்ணை அன்று காத்தாயே ராதா கிருஷ்ணா
    தன்னை மறந்து    சரண் அடைந்தால்  காக்கும் கிருஷ்ணா
    என்னை மறந்து குழந்தையானேன் காப்பாய்  கிருஷ்ணா

    துவாரகையில் ஆண்டாயே  ராஜா  கிருஷ்ணா
    குருவாயூர்  வந்தாயே  உன்னி  கிருஷ்ணா
    பாண்டவர்க்கு  அருள்புரிந்தாயே    பால கிருஷ்ணா
    வேண்டுவோர்க்கு  அருள்புரிவாய்  கிருஷ்ணா கிருஷ்ணா

    சீடைமுறுக்கு செய்து வைத்தோம் சின்னி கிருஷ்ணா
    நடைபயின்று  நளினமாய் நீ வாராய் கிருஷ்ணா
    பீடை பிணிகள் பயந்தோட  பாராய் கிருஷ்ணா
    ஓடை நீராய் வாழ்க்கையோட  அருள்வாய் கிருஷ்ணா




-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்

Wednesday 17 August 2016

ராகவேந்திர குரு கானம்



மந்திராலய மகான் ராகவேந்திரரின் 342வது ஜெயந்தியன்று(22.08.2013)
அவர் அருளால் அடியேனின் சிறு கிறுக்கல்

(ஜெய ஜெகதீஷ் ஹரே  ஆரத்தி பாடல் மெட்டு )




மந்த்ரா  லய வாசா - எங்கள்
யதீந்திர குரு ராயா
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
முந்தி நீ  வரங்களையே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


துங்கா   நதி தீர   வாசனே   என்னுள்
நீங்கா திருப்பாயே
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
ஏங்குவோர்க்  கருள்பவனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


புவனத்தை  ஆள  புவன கிரியில்
கவனமாய் உதித்தாயே
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
அவதார நாயகனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


கும்ப கோணத்தில் குருவாம் சுதீந்திரர்
நம்பியே உன்னிடமே
தம் வழி   நடக்க   தரணியை  ஆள
தம் வழி   நடக்க   தரணியை  ஆள
அமர்த்தினார் பீடத்திலே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


சூரியன் போலே  ஓரிடம் நில்லாது
வேறிடம் தினம் சென்றாய்
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
மாரியாய் அருள்புரிந்தாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


துங்கா நதியின் தீரத்தில் நீயே
தங்கியே தவம் செய்தாய்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
நீங்கா தமர்ந்தாயே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


பஞ்ச  முகியில்  பஞ்சமுக  தரிசனம்
பெற்றாய் நீ ஐயா
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
செஞ்சுடர் மேனியனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா



பிரஹலாத பிறப்பில் ஹோமம் செய்த
குண்டத்தில் நீ அமர்ந்தாய்
கிரஹதோஷம்  போக்கி சந்தோஷம் அளிப்பாய்
கிரஹதோஷம்  போக்கி சந்தோஷம் அளிப்பாய்
பிரஹலாத உருவில் நீ  - எங்கள்
ராகவேந்திர குரு ராயா



மதிமுகம்  கொண்ட மங்கள ரூபா
கதி நீயே   எங்களுக்கு
வருந்தியே வருவோர்  விதிதனை மாற்றி
வருந்தியே வருவோர்  விதிதனை மாற்றி
விருந்தாய் அருள்புரிவாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா



-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 22.08.13
(சித்தாலப்பாக்கம் ராகவேந்திரர் திருக்கோவிலில் அமர்ந்து எழுதியது)